
நீலாய், ஜனவரி-3 – நெகிரி செம்பிலான், நீலாயில் கடந்த மாதம் நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் குறித்து, போலீஸார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
டேசா பால்மா குடியிருப்பில் நிகழ்ந்த வெடிப்பு தீவிரவாதம் அல்லது குற்றச்செயல் கும்பல்களுடன் தொடர்புடையது அல்ல என மறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாறாக, 5 ஆண்டுகளுக்கு முன்பு முறிந்துபோன காதல் உறவுடன் தொடர்புடைய தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்தில் இது நடந்துள்ளது.
வெடிப்பின் போது ஏற்பட்ட தீக்காயங்களால் தற்போது முழு போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 62 வயது சந்தேக நபர், இதனை போலீஸிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
உடல்நிலை காரணமாக முன்னுக்குப் பின் முரணாக அவர் வாக்குமூலம் அளித்தாலும், சாட்சிகளின் வாக்குமூலங்கள் அவரின் பழிவாங்கும் படலத்தை உறுதிப்படுத்தும் வகையிலிருக்கின்றன.
காதல் முறிந்ததிலிருந்து மிகுந்த மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் முன்னாள் காதலியைப் பற்றியே அவர் பேசிக் கொண்டிருப்பார் என அண்டை வீட்டுக்காரர்கள் கூறியதாக, போலீஸ் கூறிற்று.
இந்நிலையில், தொடர்ந்து விசாரிக்க ஏதுவாக அவ்வாடவரின் தடுப்புக் காவல் ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



