
கோலாலம்பூர், ஜன -13-மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான (MCMC), தன் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடான Grok மூலம் ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யத் தவறியதையடுத்து, எக்ஸ் தளத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறது.
இது குறித்து விளக்கமளித்த தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்ஸில், ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான மலேசிய சட்டங்களை, குறிப்பாக ஆபத்தான உள்ளடக்கங்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் வெளிப்பாடுகள் தொடர்பான விதிமுறைகளை பின்பற்றாததே இதற்குக் காரணம் என தெரிவித்தார்.
“MCMC கடந்த வாரம் X நிறுவனத்தை தொடர்பு கொண்டு, Grok பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விளக்கம் கேட்டது. இந்த பயன்பாடு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களைப் பற்றிய அநாகரிகமான படங்கள் அல்லது உள்ளடக்கங்களை உருவாக்கக்கூடியதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், இது நமது நாட்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் மீறலாகும்.
X தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தாலும், அது போதுமானதாக இல்லை; ஏனெனில் அந்த அறிக்கை அதிகாரப்பூர்வமானதாக இல்லை. எனவே, MCMC-யிடமிருந்து அறிக்கை பெற்ற பின், Grok பயன்பாட்டுக்கு தற்காலிக தடை விதிக்கவும், X தரப்பை பேச்சுவார்த்தைக்காக அழைக்கவும், மேலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூதினார்.
இந்த தடை X தளத்தின் முழுமையான சேவைக்கு அல்ல; மாறாக, AI பயன்பாட்டில் போதிய பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாததாக கண்டறியப்பட்ட Grok பயன்பாட்டுக்கே மட்டும் என ஃபாஹ்மி விளக்கினார்.
இந்த விவகாரம் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் மீறல்களை உள்ளடக்கியதாகும். சட்டத்தை மீறும் உள்ளடக்கங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் வரை, அந்த தளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவர்.



