சமத்துவம் பொங்கட்டும்! தான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் பொங்கல் வாழ்த்து

கோலாலாம்பூர், ஜனவரி-14-“பொங்கல் என்பது அறுவடை மகிழ்ச்சி மட்டுமல்ல, ஒற்றுமையும் சமத்துவமும் பொங்கும் நாளாகும்”
எனவே, நம் முன்னோர் விவசாயத் தொழிலின் பயன்களை கொண்டாடியபோல், இந்த 2026 பொங்கல் பண்டிகை ஒற்றுமையையும் சமத்துவத்தையும் முன்னிறுத்தட்டும் என, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
தை மாதத்தின் முதல் நாள், விவசாயத் தொழிலுக்கு அடிப்படையாக இருந்து துணை நிற்கும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் அமைந்துள்ளது.
4 நாட்கள் நீடிக்கும் இந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து கட்டிக் காத்து வரும் மலேசிய இந்தியச் சமூகத்தின் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமையட்டும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அதேவேளை, நம் எதிர்காலம் இந்த மண்ணில் கேள்விக்குறியாக இருப்பதை இந்திய சமூகத்தினர் கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தினர் அனைவரும் வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமை என்ற ஒரே எண்ணத்துடன் அனைத்து சமூக மக்களோடும் ஒன்றிணைந்து இந்த பொங்கல் நன்னாளை கொண்டாடுவோம் என தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.



