
ஜோர்ஜ் டவுன் , ஜன 14 – பொழுதுபோக்கு மையங்கள், உடம்புப்பிடி நிலையங்கள் , சட்டவிரோத சூதாட்டம் போன்றவற்றை நடத்திவந்த இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக சுமார் 117,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்ற சந்தேகத்தின் பேரில், ஆறு போலீஸ்காரர்கள் உட்பட ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோரை பினாங்கு ஊழல் தடுப்பு ஆணையமான MACC தடுத்து வைத்துள்ளது.
இன்று காலை பினாங்கில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் MACC தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, அனைத்து சந்தேக நபர்களுக்கும் ஜனவரி 18 ஆம்தேதிவரை ஐந்து நாள் காவலில் வைக்க நீதிபதி ஷஹிரா அப்துல் சலீம் ( Syahirah Abdul Salim ) உத்தரவு பிறப்பித்தார்.
40 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் நேற்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பினாங்கு MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது தடுத்து வைக்கப்பட்டதாக MACCக்கு அணுக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2016 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுக்கிடையே அனைத்து சந்தேக நபர்களும் ஒவ்வொரு மாதமும் 500 ரிங்கிட் முதல் 2,000 ரிங்கிட்வரை லஞ்சம் பெறும் வகையில் செயல்பட்டதாக
தொடக்கக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனிடையே அந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதை பினாங்கு MACC இயக்குநர் Datuk Karunanithy Y Subbiah உறுதிப்படுத்தினார்.
2009 ஆண்டின் MACC சட்டத்தின் 17 (a) விதியின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.



