
கோலாலம்பூர், ஜனவரி-18-பாஸ் மற்றும் பெர்சாத்து தலைவர்களைச் சந்தித்து, ‘மலாய்–முஸ்லீம் பெருங்கூட்டணி’ குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதை, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிகாரப்பூர்வமற்ற அச்சந்திப்பு மற்ற சில கட்சிகளையும் உள்ளடக்கியதாக, துணைப் பிரதமருமான அவர் சொன்னார்.
“நாட்டின் மிகப் பெரிய மலாய்-முஸ்லீம் கட்சியான அம்னோ, கலந்துரையாடலில் தீவிரமாக பங்கேற்ற மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறது” என, நேற்று முடிவடைந்த அம்னோ பொதுப் பேரவைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சாஹிட் பேசினார்.
இந்த உத்தேச ‘மலாய்-முஸ்லீம் பெருங்கூட்டணி’ பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த குறைந்தது 10 உயர் மட்டத் தலைவர்களைக் கொண்டிருக்கும் என்றார் அவர்.
இந்த ‘பெருங்கூட்டணி’ திட்டத்தை முன்னதாக அம்னோ பொதுப் பேரவையை முடித்து வைத்து உரையாற்றுகையில் சாஹிட் முன்வைத்தார்.
எனினும், இந்த முயற்சி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தை பாதிக்காது என அவர் உத்தரவாதம் அளித்தார்.
“இது, மடானி அரசாங்கத்தைக் கவிழ்த்து பின்பக்க கதவு வழியாக புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி அல்ல; மாறாக பிளவுப் பட்டுக் கிடக்கும் மலாய்-முஸ்லீம் கட்சிகளை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியே” என சாஹிட் தெளிவுப்படுத்தினார்.
என்றாலும், பிரதமர் பதவி மீது எப்போதும் ஒரு கண் வைத்துள்ள அம்னோ, எதிர்கால தேர்தல்களை முன்னிட்டே இந்த மலாய்–முஸ்லீம் அரசியல் ஒற்றுமை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாகவும் பார்க்கப்படுகின்றது.



