
கோப்பன்ஹேகன், ஜனவரி-19-ஐரோப்பா எந்தவிதமான மிரட்டலுக்கும் அடிபணியாது என, டென்மார்க்கின் பெண் பிரதமர் Mette Frederiksen திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கிரீன்லாந்தைக் கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், தமது அந்த ஆசைக்கு குறுக்கே நின்றால், நட்பு
நாடுகள் என்றும் பாராமல் வரி விதிப்பேன் என எச்சரித்ததைத் தொடர்ந்து, இந்த பதிலடி வெளியிடப்பட்டது.
டிரம்ப் எச்சரித்த அதன் நட்பு நாடுகள் பட்டியலில் டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், ஃபின்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, சுவீடன், பிரிட்டன் ஆகிய 8 நாடுகள் உள்ளன.
எதிர்ப்பைத் தொடர்ந்தால், பிப்ரவரியில் புதிய வரி விதிப்புக்கு அவைத் தயாராக வேண்டுமென ட்ரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார்.
சுயாட்சிப் பெற்ற டென்மார்க் பிரதேசமான கிரீன்லாந்து, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிக முக்கியம் என்றும், வலுக்கட்டாயமாகவாவது அதனைக் கைப்பற்றியே தீருவது என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார்.
ஆனால், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கிரீன்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒற்றுமை நிலைத்திருக்கும் என்றும் Federiksen வலியுறுத்தினார்.
8 நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அவர் அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில், அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை விரும்புகிறோம், ஆனால் அதன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என, ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும் இந்த வரி மிரட்டல்களை கண்டித்துள்ளன.
ட்டிரம்பின் திட்டம் ஆபத்தான பாதையை உருவாக்கும் என்று எச்சரித்துள்ள ஐரோப்பிய நாடுகள், தங்களுக்கிடையிலான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.



