
லண்டன், ஜனவரி-21-உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் டேவிட் பேக்கம் மற்றும் ஃபேஷன் வடிவமைப்பாளர் விக்டோரியா பேக்கம் ஆகியோரின் மூத்த மகன் ப்ரூக்ளின் பேக்கம், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து முதன்முறையாக பொது வெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தனது மனைவி நிக்கோலா பெல்ட்ஸுடனான (Nicola Peltz) திருமணத்தை தனது பெற்றோரே கெடுக்க முயன்றதாக ப்ரூக்ளின் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“ஆரம்பத்திலிருந்தே நிக்கோலாவை அவர்களுக்குப் பிடிக்கவில்லை; எனவே திருமணத்தை நிறுத்த அனைத்து வகையிலும் முயன்றனர்” என ப்ரூக்ளின் பேசியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“எல்லா விஷயத்திலும் என்னை அவர்களின் கட்டுப்பாக்குள் வைத்துக் கொள்ள விரும்பும் பெற்றோருடன் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என 26 வயது ப்ரூக்கிள் அதிரடியாகக் கூறினார்.
தனது வாழ்க்கையில் முதல் முறையாக தனக்காக தாம் தைரியமாகக் குரல் கொடுக்க முனைந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
தனது வாழ்க்கை மற்றும் மனநலத்தை பாதுகாப்பதே தற்போது முக்கியம் என்றும், அதனால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
நீண்ட காலமாகவே நீடிக்கும் இந்த குடும்ப தகராறு, அண்மையில் பேக்கமின் 50-ஆவது பொன்விழா பிறந்த நாளில் உச்சக் கட்டத்தை அடைந்தது.
அதில் பங்கேற்பதற்காக மனைவியுடன் லண்டனுக்கு பறந்த போதும், அங்கு ஏதோ அழையா விருந்தாளி போல தாங்கள் நடத்தப்பட்டதாக ப்ரூக்ளின் விரக்தியுடன் கூறியிருந்தார்.
இதுவரை பேக்கம் குடும்பம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
இருப்பினும், டேவிட் பேக்கம் முன்பு அளித்த பேட்டியில், “குழந்தைகளுக்கு முடிவுகளை எடுக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ள இந்த குடும்பப் பிரச்சனை, எதிர்காலத்தில் சமரசமாக மாறுமா என்பதே இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



