
வாஷிங்டன், ஜனவரி 21 – நாசாவின் மூத்த விண்வெளி வீராங்கனையான சுனித்தா வில்லியம்ஸ், 27 ஆண்டுகள் சேவைக்கு பின்னர், கடந்தாண்டு டிசம்பர் 27 ஆம் தேதி முதல் நாசாவிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அவர் தனது பணிக்காலத்தில் மூன்று முறை சர்வதேச விண்வெளி நிலையமான ISS-க்கு பயணம் செய்து, விண்வெளியில் மொத்தம் 608 நாட்கள் தங்கியுள்ளார். மேலும், 9 விண்வெளி நடைப்பயணங்கள் மேற்கொண்டு, பெண்களில் அதிக நேரம் வெளியில் பணியாற்றிய சாதனையையும் பெற்றுள்ளார்.
சுனித்தா வில்லியம்ஸ் 2006 ஆம் ஆண்டு முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். 2012 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் ISS-க்கு பயணம் செய்து, விண்வெளி நிலையத்தின் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். சமீபத்திய பயணத்தில், அவர் 2025 மார்ச் மாதம் பூமிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாசா நிர்வாகிகள், விண்வெளி ஆராய்ச்சிக்கு அவரது பங்களிப்புகள் சந்திரன் மற்றும் செவ்வாய் நோக்கிய எதிர்கால பயணங்களுக்கு முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளதாக பாராட்டியுள்ளனர்.
ஓய்வு பெற்ற பின்னர், நாசாவின் அடுத்த கட்ட வரலாற்றுச் சாதனைகளை அவர் வெளியில் இருந்து காண ஆவலுடன் இருப்பதாக சுனித்தா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.



