
பத்து மலை, ஜனவரி-22-தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 1-ஆம் தேதியே கொண்டாடப்படவிருந்தாலும், ஏராளமான பக்தர்கள் முன்கூட்டியே பத்து மலையில் நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பு வசதிக்காக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில், பத்துமலை ஆற்றங்கரை வளாகத்தில் இன்று புதிய தார் சாலைப் போடும் பணிகள் நடைபெற்றன.
இப்பணிகள் தேவஸ்தானத்தின் பிரபல குத்தகையாளர் விவேக் தலைமையில் மேற்கொள்ளப்பட்டதாக, தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு, அது மிகவும் சுத்தமாகவும், பக்தர்களை வரவேற்கவும் தயாராக உள்ளது.
இனி இந்த சுத்தத்தைக் காப்பது பக்தர்களின் பொறுப்பு என நடராஜா சொன்னார்.
இதனிடையே, கெடா மாநில அரசாங்கம் தைப்பூசத்திற்கு சம்பவ விடுமுறையாக அல்லாமல் மாநில பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென தான் ஸ்ரீ நடராஜா கோரிக்கையை முன்வைத்தார்.
தைப்பூசத்திற்கு தேசிய பொது விடுமுறை இல்லை என்பதால், இந்துக்கள் அதிகமுள்ள சிலாங்கூர், பேராக், ஜோகூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் கோலாலாம்பூர் போன்ற குறிப்பிட்ட மாநிலங்கள் மட்டுமே பொது விடுமுறையாக அனுசரிக்கின்றன.



