
கோலாலம்பூர், ஜன 22 – கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலீட்டாளர்களை 300 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் டான்ஸ்ரீ விருதை கொண்டுள்ள பிரமுகர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்துள்ளது.
60 வயதுடைய அந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக MACC தலைமை ஆணையர் அசாம் பாகி (Azam Baki) தெரிவித்தார். அந்த நபரை விசாரணைக்காக நான்கு நாள் தடுத்து வைப்பதற்கு புத்ரா ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று காலையில் அனுமதி வழங்கியது.
ஒரு முதலீட்டு நிறுவனத்தின் வாரிய உறுப்பினராக இருக்கும் 50 வயதுடைய பெண், பெரிய அளவிலான மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
பல முதலீட்டாளர்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ள வேளையில் இரண்டு சந்தேக நபர்களால் வழங்கப்பட்ட முதலீடுகள் மாறுபட்டன மற்றும் அதிக வருமானம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டதாக அசாம் பாகி தெரிவித்தார்.
முதலீடு விவகாரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதோடு , அதிக இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளைத் தவிர்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.



