
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-24-பினாங்கு, தண்ணீர் மலை தைப்பூசத் திருவிழா, பக்தி மற்றும் பாதுகாப்பு என்ற இரு தூண்களைக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.
அதன் காரணமாகவே தைப்பூசப் பந்தல் இசை இரவு 11.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது; இது கூட, தைப்பூச நாளான பிப்ரவரி 1-ம் தேதி மட்டுமே என, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் தெளிவுப்படுத்தினார்.
திருக்காப்பு விழா இரவு 11.00 மணிக்கு நடைபெறுவதால், காவடி எடுத்தவர்கள் குறித்த நேரத்தில் மேல்குகை கோவிலுக்குச் சென்று தங்களின் நேர்த்திக் கடன்களை முடிக்க வேண்டியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
பந்தல் சேவைகள் மற்றும் பக்தி நடவடிக்கைகள் இரவு முழுவதும் தொடரலாம் என்றார் அவர்.
கடந்தாண்டு பக்தர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியதாக போலீஸ் தரவுகள் காட்டுகின்றன.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல், அதில் 7 பேர் மயங்கி விழுந்த சம்பவம், அம்புலன்ஸ் வண்டி செல்ல முடியாத நிலை என… அனைத்தையும் கருத்தில் கொண்டே இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
முதலில் போலீஸார் இரவு 10.00 மணிக்கே இசையை நிறுத்த உத்தரவிட்டனர்; ஆனால் அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர் தலைமையிலான குழுவின் முயற்சியால், அது இரவு 11.00 மணி வரை நீட்டிக்கப்பட்டதாக லிங்கேஷ்வரன் விளக்கினார்.
தைப்பூசப் பந்தல் இசை தொடர்பான உத்தரவு குறித்து சமூக ஊடகங்களில் வெளியான அதிருப்திகள் குறித்து லிங்கேஷ்வரன் கருத்துரைத்தார்.
இவ்வேளையில், மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு பேரவை, அறப்பணி வாரியம் மற்றும் போலீஸாரின் இந்த உத்தரவை முழுமையாக ஆதரிக்கிறது.
இசை பக்தியை உயர்த்தலாம், ஆனால் உயிர் பாதுகாப்பை பாதிக்கக் கூடாது.
எனவே, கோவில் நிர்வாகம், அறப்பணி வாரியம், போலீஸ் மற்றும் சமூகத்துடன் இணைந்து, இவ்வாண்டு தைப்பூசம் அழகாகவும், அமைதியாகவும், ஆன்மீகமாகவும் நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம் என, அப்பேரவை அறிக்கையொன்றில் கூறியது.



