
கோலாலம்பூர், ஜன 26 – கெடாவில் பொது இடத்தில் குப்பை வீசியதற்காக முதல் முறையாக இந்தோனேசிய ஆடவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு சமூக சேவை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12.10 மணியளவில் Menara Alor Setar பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்ட குப்பை தொட்டியில் சிகரெட் துண்டுகளை வீசுவதற்குப் பதிலாக கால்வாயில் வீசியதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 39 வயதான ஜுப்ரி சுல்கிப்லி ( Jufri Zulkifli ) அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி என் பிரிசில்லா ஹேமமாலினி முன் ஒப்புக்கொண்டார்.
கட்டுமானத் தொழிலாளியான Jufri மீது 2007 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்புச் சட்டத்தின் 77A(1) இன் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. பொது இடங்களில் குப்பை கொட்டும் பொதுமக்களுக்கு ஒரு பாடமாக நீதிமன்றம் பொருத்தமான தண்டனையை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் Nur Idayu Syazwani Mohd Arif நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படதோடு, இரண்டு மாத காலத்திற்குள் ஒரு நாளைக்கு அதிகபட்டசமாக ஒரு மணி நேரம் சமூக சேவை செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அபராத தொகையை செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவிக்கும்படியும் அந்த ஆடவருக்கு உதத்தரவிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர் அபராதத் தொகையை செலுத்தியதோடு விரைவில் சமூக சேவை உத்தரவை நிறைவேற்றுவார் என கூறப்பட்டது.



