
ஷா ஆலாம், ஜனவரி 26 – உலு சிலாங்கூர், Bukit Tagar பகுதியில் முன்மொழியப்பட்டிருந்த பன்றி வளர்ப்பு திட்டம், கடும் மக்கள் எதிர்ப்பிற்கு பிறகு ரத்து செய்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சிலாங்கூர் மந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார்.
மாநில உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை துறை பொறுப்பாளர் Datuk Izham Hashim, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததாக அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து, மாநில செயற்குழு கடந்த வாரமே இந்த முடிவை எடுத்ததாக Amirudin கூறினார்.
இந்த முடிவு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்த ஆலோசனைக்கும் இணங்க இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
“பிரதமர் தெரிவிப்பதற்கு முன்பே, Bukit Tagar-இல் ஏற்பட்ட எதிர்ப்பை கருத்தில் கொண்டு, மாற்று இடங்களை தேடுமாறு செயற்குழு உத்தரவிட்டது,” என்றார்.
எனினும், புதிய இடம் அல்லது மாற்று நடைமுறை குறித்து தற்போது எந்த அறிவிப்பும் இல்லை என்றும், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டம் குறித்த அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்பட்டதால் பொதுமக்களிடையே தவறான எண்ணம் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து அரசு பாடம் கற்றுக்கொள்ளும் என்றும் அமீருதின் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் அன்வார், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உள்ளூர் மக்களின் கவலையும் முதன்மை என்பதால், அமைச்சரவை இந்த திட்டத்தை ரத்து செய்ய பரிந்துரைத்ததாக தெரிவித்திருந்தார்.



