
கோலாலாம்பூர், ஜனவரி-28 – மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய ஏற்பாட்டில் இன்று காலை வாஸ்து சாந்தி மற்றும் கணபதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.
காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற இந்த வைபவத்தில், கணபதி ஹோமம், புனியகவாசனம், வாஸ்து சாந்தி பூஜை ஆகிய புனித கிரியைகள் நடைபெற்றன.
பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு, ஆலயத்தின் புதிய நிலத்தில் அமைதி, செழிப்பு மற்றும் தெய்வ அருளை வேண்டினர்.
ஒரு வாரமாகவே நடைபெற்று வரும் இந்த நிகழ்வு சமூகத்தின் ஆன்மீக ஒற்றுமையையும், பக்தர்களின் வேண்டுதல்களையும் நிறைவேற்றும் முக்கியமான மைல்கல்லாகும் என ஆலயத் தலைவர் Dr பார்த்திபன் கண்மணி தெரிவித்தார்.

இவ்வேளையில், 50 மீட்டர் தொலைவில் ஆலய இடமாற்றத்திற்கு அரசாங்கம் ஒதுக்கிய நிலம் தொடர்பிலும் அவர் வணக்கம் மலேசியாவிடம் கருத்துரைத்தார்.
ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட படி தற்போதுள்ள இடத்தில் பூஜைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; புதிய இடம் தயாரானதும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு அங்கும் பூஜைகள் தொடரும் என்றார் அவர்.
நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த இந்த தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் நிலம் கடந்தாண்டு சர்ச்சையில் சிக்கியது.
நில உரிமையாளரான ஜேக்கல் டிரேடிங் அப்பகுதியில் ‘மடானி மசூதி’யை கட்டவிருப்பதால், ஆலயம் இடமாறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டானது.
பிறகு இடமாற்றத்திற்கு ஆலய நிர்வாகம், கோயில் நிர்வாகம், ஜேக்கல் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் நல்லிணக்க அடிப்படையில் இணக்கம் காணப்பட்டது
இந்நிலையில், தைப்பூசத்துக்குப் பிறகு ஆலய இடமாற்றம் சுமூகமாக மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.



