
கோலாலாம்பூர், ஜனவரி-30 – பிரதமர் செம்பருத்தி விருது 2024/2025 மொத்தம் 81 நிறுவனங்களின் பங்கேற்புடன் சாதனைப் படைத்துள்ளது.
கோலாலாம்பூரில், விருது விழாவைத் தொடக்கி வைத்து பேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் டத்தோ ஸ்ரீ Arthur Joseph Kurup அதனைத் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை நடைமுறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை கௌரவிக்க இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து பதிவான மிக அதிகமான பங்கேற்பு இதுவாகும்.
பங்கேற்ற நிறுவனங்கள் உற்பத்தி, இரசாயனம், ஆற்றல், கட்டுமானம், விருந்தோம்பல், செம்பனைத் தோட்டங்கள் மற்றும் எண்ணெய் – எரிவாயு போன்ற துறைகளை உள்ளடக்கியவை.
மலேசியாவின் ESG தரநிலைகள் மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கு நிறுவனங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை அவற்றின் பங்கேற்பு வெளிப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விருது, மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனமான MICCI, மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான FMM மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி சங்கமான EMRAM ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.
பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், முதன்மை விருதான Challenge Trophy, Daikin Malaysia Sdn. Bhd. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
அடுத்தாண்டு 150 நிறுவனங்களை ஈர்க்க ஏற்பாட்டுக் குழு இலக்கு வைத்துள்ளது.



