
கிள்ளான், மே-17-மலேசிய வரலாற்றில் முதன்முறையாக தேசிய அளவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட ‘1-ஆவது தேசியத் திருக்குறள் ஒலிம்பியாட் 2026’ போட்டியின் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று கிள்ளான், ஹொக்கியன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இளையத் தலைமுறையினரிடையே தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் தார்மீக ஒழுக்கப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில், மலேசிய இந்திய இளைஞர் மன்றமான MIYC-யின் சிலாங்கூர் கிளையின் ஏற்பாட்டில், மார்ச் 28-ஆம் தேதி நாட்டின் 8 மாநிலங்களில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் இப்போட்டி நடத்தப்பட்டது.
10 முதல் 12 வயது மற்றும் 13 முதல் 18 வயது என 2 பிரிவுகளில் வினா-விடை (Quiz) முறையில் நடைபெற்ற இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதன் மூலம், மிக அதிகமானோர் பங்கேற்ற திருக்குறள் போட்டி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து, இப்போட்டி ‘மலேசிய சாதனைப் புத்தகத்தில்’ (Malaysia Book of Records) அதிகாரப்பூர்வமாக இடம் பிடித்துள்ளது.
நேற்றையப் பரிசளிப்பு விழாவில் கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலங்களைச் சேர்ந்த 800 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் 200 இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இப்போட்டியின் நிறுவனரும் முதன்மை இயக்குநருமான சசிதரன் பரமசிவத்தின் இந்த வரலாற்றுச் சாதனைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் மாணவர்களுக்குச் சிறப்பு விருதுகளை வழங்கினார்.
மேலும், MIYC தலைவர் தனேஷ் பசில், டத்தோஸ்ரீ பிரகாஷ், வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி, சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டத்தோ விக்ஸ் மற்றும் ஸ்ரீ ராமானுஜன் கணிதப் போட்டியின் நிறுவனர் லோகநாதன் ஆகியோர் மாணவர்களுக்குத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை எடுத்து வழங்கினர்.
பின்னர் வணக்கம் மலேசியாவிடம் பேசிய டத்தோ ஸ்ரீ சரவணன், திருக்குறளை மனனம் செய்வதோடு மட்டுமல்லாமல், படித்த குறள்களில் ஒன்றை வாழ்வில் கடைப்பிடித்தால், அதுவே இப்போட்டிக்குக் கிடைத்த உண்மையான வெற்றி என்றார்..
முதன் முறையாக நடத்தப்பட்டாலும், போட்டிக்குக் கிடைத்த வரவேற்பு தமக்கு பெரும் உத்வேகத்தைத் தந்துள்ளதாக,ம ஒலிம்பியாட் திட்ட இயக்குநர் சசிதரன் பரமசிவம் கூறினார்.
இப்போட்டியின் ஏற்பாட்டில் பங்கெடுத்தது பெருமையளிப்பதாகக் கூறிய MindAppz Sdn Bhd நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான கே. தினேஷ் குமார் மாணவர்களின் பங்கேற்பு ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாக சொன்னார்.
போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
வாழ்க்கையின் எல்லா காலக் கட்டங்களிலும், அனைத்திற்கும் பொருந்துவதாக அமைந்துள்ள திருக்குறளை, இன்றைய மாணவர்களின் நாளைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களிடத்தில் பதிய வைக்கும் முயற்சியாக இந்த திருக்குறள் ஒலிம்பியாட் போட்டி பாராட்டைப் பெறுகிறது.



