
பாலேக் பூலாவ், அக்டோபர்-25 – இயற்கைப் பேரிடர் காலங்களில், AI அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்குவதையோ அல்லது பகிருவதையோ தவிர்க்க வேண்டுமென, பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பினாங்கு, பாயா தெருபோங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வாகனங்கள் மூழ்கியதாகக் கூறி வைரலான வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சைரில் கிர் ஜொஹாரி (Zairil Khir Johari) அவ்வாறு அறிவுறுத்தினார்.
அந்தக் குற்றச்சாட்டு பின்னர் பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டது.
7 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ, ஒரு பழைய வீடியோவிலிருந்து டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என சைரில் சொன்னார்.
இதுபோன்ற செயல்கள் பொது மக்களிடையே தேவையற்ற பீதியையும் குழப்பத்தையும் தூண்டக்கூடும் எனக் கூறி, வைரலான வீடியோவுக்கு பொறுப்பானவர்களை அவர் கண்டித்தார்.
வெள்ளிக்கிழமை திங்காட் பாயா தெருபோங் அம்பாட்டில் உள்ள புக்கிட் பாயா தெருபோங் பகுதியில் நிலச்சரிவு மற்றும் நீர் தேங்கிய சம்பவத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஆனால் போலி வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளதை விட நிலைமை மோசமில்லை என்பதை அவர்கள் தெளிவுப்படுத்தினர்.
கனமழையைத் தொடர்ந்து பிற்பகல் 2.41 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.
மழைக் காரணமாக, மலை உச்சியிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரமுள்ள மண் சரிந்து அருகிலுள்ள வீட்டு வளாகத்தின் வாகன நிறுத்துமிடப் பகுதியை மூடியதோடு, தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து 12 வாகனங்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டன.



