AI-யை தவறாக பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் உருவாக்குவது குற்றம்: MCMC எச்சரிக்கை

சைபர்ஜெயா, ஜனவரி-4,
AI கருவிகளை தவறாக பயன்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை மாற்றி, அசிங்கமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை உருவாக்குவது குற்றமாகும் என, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC எச்சரித்துள்ளது.
X தளத்தில் அச்செயல் பரவலாக நடைபெற்று வருவதாக கிடைத்துள்ள புகாரை விசாரித்து வருவதாகவும் அது கூறிற்று.
இத்தகைய உள்ளடக்கங்களை உருவாக்குதல் அல்லது பரப்புதல், 1998-ஆம் ஆண்டு MCMC சட்டத்திற்கு எதிரானது.
இந்நிலையில், ONSA எனப்படும் 2025 இணையப் பாதுகாப்புச் சட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், அனைத்து சமூக ஊடகத் தளங்களும் சேவை வழங்குநர்களும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைத் தடுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
அவ்வகையில், X தளம் உரிமம் பெற்ற சேவை வழங்குநர் அல்லாதபோதிலும், மலேசியாவின் இணையப் பாதுகாப்பு தரநிலைகளை அது பின்பற்றியே ஆக வேண்டுமென MCMC வலியுறுத்தியது.
X தளத்தின் பிரதிநிதிகள் விரைவிலேயே விளக்கமளிக்க அழைக்கப்படுவார்கள் என்றும், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் குறித்து பயனர்கள் MCMC மற்றும் போலீஸுக்கு புகாரளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கின் xAI நிறுவனம் உருவாக்கிய Grok எனும் AI chatbot சிறார்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை ‘உடை கழற்றியப்’ போல மாற்றியமைத்ததாக முன்னதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
X தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட Grok, பயனர்கள் X-சில் உள்ள எந்தவொரு படத்தையும் மாற்ற அனுமதிக்கிறது.
இதனைப் பயன்படுத்தி உரியவரின் அனுமதியின்றி அவரின் புகைப்படத்தை ஓரளவோ அல்லது முழுமையாகவோ டிஜிட்டல் முறையில் ஆடைகளை அவிழ்க்க அச்செயலி பயன்படுத்தப்பட்டு, X தளமே ஆபாசப் படங்களால் நிரம்பி வழிந்தது.
இது சர்ச்சையாகி, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்த நிலையில், xAI நிறுவனத்திற்கு எதிராக பிரான்சும் இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



