
கோலாலாம்பூர், டிசம்பர்-3 – முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட், அமெரிக்கா – மலேசியா இடையேயான ART வாணிப ஒப்பந்தம் தொடர்பாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.
புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்தில் அப்புகார் பதிவுச் செய்யப்பட்டது.
அதில், ART ஒப்பந்தம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், அதன் 4 முக்கியக் கூறுகளான மாமன்னர், நாடாளுமன்றம், மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் மற்றும் அரசாங்கத்தின் அனுமதி பெறப்படவில்லை என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
தவிர, இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு அதிகாரம் வழங்கும் விதிகள் உள்ளதோடு, பூமிபுத்ரா உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் அப்பெரும்தலைவர் குற்றம்சாட்டினார்.
எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை அன்வார் மீறியுள்ளாரா என்பதை போலீஸ் விசாரிக்க வேண்டுமென மகாதீர் கேட்டுக் கொண்டார்.
இதே போல் நாடு முழுவதும் 139 போலீஸ் புகார்கள் ART ஒப்பந்தம் குறித்து பதிவுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, புமிபுத்ரா கொள்கைகள் பாதிக்கப்படவில்லை என ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது.



