
கலிஃபோர்னியா, ஏப்ரல்-11-Artemis II திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து, நிலவைச் சுற்றி பயணம் செய்த 4 விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.
அவர்களை ஏற்றியிருந்த Orion விண்கலம் கலிஃபோர்னியா கடற்கரைக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சுமார் 10 நாட்கள் நீடித்த இப்பயணம், 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்கள் மீண்டும் நிலவைச் சுற்றி வந்து பாதுகாப்பாக திரும்பிய வரலாற்றுச் சாதனையாகும்.
இக்குழுவில் Reid Wiseman, Victor Glover, Christina Koch மற்றும் Jeremy Hansen ஆகியோர் இடம்பெற்றனர்.
தரையிறங்கியதும் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, Houston-னில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இத்திட்டத்தின் மூலம், முதல் முறையாக ஒரு பெண் மற்றும் அமெரிக்கர் அல்லாத ஒருவர் நிலவுப் பயணத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த 10-நாள் பயணத்தில், அந்நால்வரும் நிலாவின் மேற்பரப்பைப் பற்றிய விரிவான கண்காணிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அதோடு விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தை கண்டு, விண்கல் மோதல்களின் விளைவுகளையும் அவர்கள் பார்த்தனர்.
இந்த வெற்றி, எதிர்காலத்தில் மனிதர்களை மீண்டும் நிலவில் தரையிறக்குவதற்கான முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.



