பத்து மலை மின் படிகட்டு விவகாரம் கோயில் பதிவுச் சட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட சர்ச்சை; ராமசாமி கருத்து
கோலாலம்பூர், ஜனவரி-10,
பத்து மலை மின் படிக்கட்டு சர்ச்சை, இந்து கோவில்களின் பதிவு முறையை சிலாங்கூர் அரசாங்கம் தவறாகப் புரிந்துகொண்டதிலிருந்து உருவானது என உரிமைக் கட்சியின் தலைவர் Dr.பி. ராமசாமி கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள இந்து கோவில்கள் அனைத்தும் சங்க பதிவிலாகாவான ROS-ல் மட்டுமே பதிவுச் செய்யப்பட வேண்டும் என்பது தவறான கருத்தாகும்.
இங்குள்ள கோவில்கள் அறக்கட்டளை, ROS அல்லது பினாங்கு இந்து அறப்பணி வாரியம் போன்று சட்ட அமைப்புகளின் கீழும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன என்பதை ராமசாமி நினைவுறுத்தினார்.
அவ்வகையில், 1930-களிலேயே அறக்கட்டளையாகப் பதிவுச் செய்யப்பட்ட பத்து மலை கோவில், தற்போது தான் ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் உள்ளது.
தைப்பூசத் திருவிழாவில் திரளாக கூடும் பக்தர்களின் வசதிக்காக மின் படிக்கட்டு அமைக்கக் அனுமதி கோரப்பட்டுள்ளது .
ஆனால் தற்காலிக ஆக்கிரமிப்பு அனுமதிக்கான அந்த TOL விண்ணப்பம், தகுதி இல்லாமையால் அல்ல, மாறாக மாநில அரசின் குறுகிய நிபந்தனைகளுக்கு பொருந்தாததாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கட்டாயம் ROS-சில் பதிந்திருக்க வேண்டும் என மாநில அரசு தவறாக புரிந்துகொண்டுள்ளதால் ஏற்பட்ட விளைவு இது.
நூற்றாண்டு பழமையான கோவிலை ROS-ல் பதிவுச் செய்ய கட்டாயப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என ராமசாமி சுட்டிக் காட்டினார்.
இந்த சட்டப்பூர்வ பிரச்னையைத் தீர்க்க தேவஸ்தான வழக்கறிஞர்கள் நீதிமன்ற உத்தரவை நாடி வருகின்றனர்.
இது தனிமனித விவகாரமோ திட்டமோ அல்ல…
லட்சணக்கணக்கான பக்தர்கள் சம்பந்தப்பட்டது.
எனவே இவ்விவகாரத்தில் விரைவிலேயே நல்லுணர்வு மேலோங்கி, பக்தர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துள்ள மின் படிக்கட்டு விரைவில் அமைய வேண்டும் என ராமசாமி தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
தனிமனிதர் பெயரில் விண்ணப்பம் செய்யப்பட்டதால் தான் மின் படிகட்டுக்கு அனுமதி வழங்கவில்லை என்றும், ROS-சில் பதிந்திருக்க வேண்டுமென்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு கூறிய நிலையில், அதனை மறுத்துள்ள தேவஸ்தானம், அக்கூற்றை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



