
கோலாலம்பூர், பிப்ரவரி-25 – BRIEF-i எனப்படும் இந்தியத் தொழில்முனைவர்களுக்கான பேங்க் ராக்யாட் கடனுதவித் திட்டத்திற்கு மொத்தமாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதன் அடிப்படையில், அந்நிதி ஒதுக்கீடு அமைவதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதன் மூலம் மேலும் ஏராளமான இந்தியத் தொழில்முனைவோர் பயன்பெறுவர்; குறிப்பாக தத்தம் வணிகங்களை மேம்படுத்தவும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை வணிகத்தில் புகுத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
கடந்தாண்டு 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் இந்த BRIEF-i கடனுதவித் திட்டத்தை பேங்க் ராக்யாட் தொடங்கியது.
அதில், பிப்ரவரி 21-ஆம் தேதி வரை கீழ் நாடு முழுவதும் 512 குறு, சிறு, நடுத்தர வணிகர்களுக்கு 49 மில்லியன் ரிங்கிட் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து, சேவைத் துறை, மளிகை வியாபாரம், உணவு மற்றும் பானங்கள் விற்பனைத் துறைகளைச் சேர்ந்த ஏராளமான இந்தியத் தொழில்முனைவோர் பயனடைந்தனர்.
இவ்வெற்றியைத் தொடர்ந்து இவ்வாண்டு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக டத்தோ ஸ்ரீ ரமணன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மெனாரா பேங்க் ராக்யாட்டில் BRIEF-i கடனுதவிக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது துணையமைச்சர் அவ்வாறு சொன்னார்.
டத்தோ ஸ்ரீ ரமணன் கையால் BRIEF-i கடனுதவிக்கான காசோலைகளைப் பெற்ற இந்தியத் தொழில்முனைவர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.