
புத்ராஜெயா, செப்டம்பர்-28,
BUDI95 எரிபொருள் மானியத் திட்டம் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நேற்று மட்டும் 60,000-க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் போலீஸ் வீரர்கள் தங்களது வாகனங்களில் லிட்டருக்கு RM 1.99 விலையில் RON95 பெட்ரோலை நிரப்பினர்.
மொத்தமாக 1.3 மில்லியன் லிட்டர் மானிய எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
என்றாலும் பெட்ரோல் நிலையங்களில் எந்த தாமதமோ புகாரோ பதிவுச் செய்யப்படவில்லை.
MyKad அடையாள அட்டைகளை scan செய்யும் கருவிகளும் சிறப்பாக செயல்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்தது.
நாடு பாதுகாப்பாக இருக்க தங்களது பங்களிப்பை வழங்கும் இராணுவத்தினருக்கும் போலீஸ் வீரர்களுக்கும் முதலாவதாக இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை முதல், வருமான வித்தியாசமின்றி அனைத்து மலேசியர்களும் லிட்டருக்கு RM1.99 என்ற விலையில் RON95 பெட்ரோலை பெற முடியும்.
இந்த BUDI95 திட்டத்தால் 18 மில்லியன் வாகனமோட்டிகள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 8.1 மில்லியன் பேர், இந்த மானியத் திட்டத்திற்கான தங்களது தகுதியை இணையம் மூலம் சரிபார்த்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.