Latestஉலகம்

CCTV கேமரா பயன்பாடு மீதான இந்தியாவின் புதியக் கொள்கை; சீன நிறுவனங்கள் விரைவில் வெளியேறலாம்

புது டெல்லி, அக்டோபர்-2, லெபனான் நாட்டில் அண்மையில் பேஜர் (pager) கருவிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, சீன தயாரிப்பிலான CCTV கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இந்தியா ஆயத்தமாகி வருகிறது.

இந்திய நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் CCTV-க்கான புதியக் கொள்கையை அந்நாட்டரசு அமுல்படுத்தவுள்ளது.

அக்டோபர் 8-ம் தேதியே அது அமுலுக்கு வரலாமென, நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நடவடிக்கையானது வெடிப்புகளுக்கு பயந்து அல்ல; மாறாக, இரகசியத் தரவுகளின் கசிவைத் தடுக்கவே என அதிகாரிகள் கூறினர்.

CCTV கேமரா நிறுவனங்கள் நினைத்தால், அவற்றை ஊடுருவி (hack) தகவல்களைத் திருட முடியும்.

எனவே உள்நாட்டு மற்றும் நம்பகமான நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை மட்டுமே அத்தொழிலில் அனுமதிப்பது என, இந்திய அரசின் புதிய கொள்கை கூறுகிறது.

தற்போது, இந்திய cctv சந்தையில் CP Plus, Hikvision, Dahua ஆகிய மூன்று நிறுவனங்கள், 60 விழுக்காடு ஆதிக்கத்தை வைத்துள்ளன.

அவற்றில், Hikvision மற்றும் Dahua ஆகிய இரண்டும் சீன நிறுவனங்களாகும்.

அந்நிறுவனங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கூறி, 2022-ல் அமெரிக்காவில் அவற்றின் தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் புதியக் கொள்கையால், இந்தியச் சந்தையிலிருந்தும் சீன நாட்டு CCTV தயாரிப்பு நிறுவனங்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!