
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-23,
DAP மூத்தத் தலைவர்கள் மூவர் தொடுத்த அவதூறு வழக்கில் பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா முஹமட் (Siti Mastura Muhammad), 830,000 ரிங்கிட்டை இழப்பீட்டுத் தொகையாகச் செலுத்தியுள்ளார்.
இரு தரப்புக்கும் இடையில் காணப்பட்ட இணக்கத்தின் படி அத்தொகைச் செலுத்தப்பட்டுள்ளது;
மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை, அப்பணம் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின் கணக்கிலேயே இருக்குமென சித்தி மஸ்துராவின் வழக்கறிஞர் யுஸ்ஃபாரிசால் யூசோஃப் (Yusfarizal Yusoff) கூறினார்.
மறைந்த மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ச்சின் பெங்குடன் (Chin Peng) தங்களைத் தொடர்புப் படுத்தியதற்காக, ஸ்ரீ லிம் கிட் சியாங், லிம் குவான் எங், திரேசா கோக் ஆகிய 3 DAP தலைவர்களும் சித்தி மஸ்துரா மீது அவ்வழக்கைத் தொடுத்திருந்தனர்.
வழக்கை விசாரித்த பினாங்கு, ஜோர்ஜ்டவுன் உயர் நீதிமன்றம், அம்மூவருக்கும் சித்தி மஸ்துரா மொத்தமாக 750,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.
குறிப்பாக கிட் சியாங்கிற்கு 300,000 ரிங்கிட், குவான் எங்கிற்கு 250,000 ரிங்கிட் மற்றும் திரேசாவுக்கு 200,000 ரிங்கிட்டை வழங்க உத்தரவிடப்பட்டது.
அதோடு, செலவுத் தொகையாக மூவருக்கும் தலா 25,000 ரிங்கிட்டைத் தருமாறும் சித்தி மஸ்துரா பணிக்கப்பட்டார்.
அந்த கெப்பாளா பாத்தாஸ் (Kepala Batas) நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்ட அபராதத்தைச் செலுத்தத் தவறினால், ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
அத்தீர்ப்பின் அமுலாக்கத்தை நிறுத்தி வைக்க சித்தி மஸ்துரா கோரியிருந்த நிலையில், இத்தொகையைச் செலுத்தியுள்ளார்.