
ஷா ஆலாம், மார்ச்-17 – பரபரப்புடன் நடைபெற்ற DAP மத்தியச் செயலவைக்கானத் தேர்தலில், இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிக வாக்குகளுடன் முதலிடம் பெற்றார்.
டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் 2,785 வாக்குகளைப் பெற்றார்.
கட்சியின் அதிகாரமிக்க பொதுச் செயலாளரான அந்தோணி லோக் 2,508 வாக்குகளுடன் ஐந்தாவதாக வந்தார்.
நடப்புத் தலைமைத்துவத்தால் ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்பட்ட லிம் குவான் எங் கடும் போராட்டத்திற்குப் பிறகு 1,719 வாக்குகளுடன் 26-ஆவது இடத்தைப் பிடித்து, கட்சியில் தமது இருப்பை நிலை நிறுத்தினார்.
எனினும் அவரின் தங்கையும் நிதித் துறை துணையமைச்சருமான லிம் ஹுய் யிங் அதில் தோல்வியுற்றார்.
பெரும் அதிர்ச்சியாக மூத்த தலைவர்களில் ஒருவரான திரேசா கோக், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் இருவரும் 30 பேர் கொண்ட மத்தியச் செயலவைக்குத் தேர்வாகாமல் தோல்வி கண்டனர்.
மத்தியச் செயலவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனையோரில் ஙா கோர் மிங், ஹானா இயோ, தியோ நீ ச்சிங், ராம் கர்பால் சிங், கஸ்தூரி பட்டு, ஸ்டீவன் சிம் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
பழையப் புதிய முகங்களின் கலவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மத்தியச் செயலவை உறுப்பினர்களும் 2028 வரை மூன்றாண்டுகளுக்குப் பதவியிலியிருப்பர்.
இவ்வேளையில், அந்த 30 பேரும் சேர்ந்து கோபிந்த் சிங்கை DAP-பின் புதியத் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுதுள்ளனர்.
வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் துணைத் தலைவரானார்.
போக்குவரத்து அமைச்சரான அந்தோணி லோக் பொதுச் செயலாளராகத் தொடரும் வேளை, லிம் குவான் எங் கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் 5 உதவித் தலைவர்களில் ஒருவராக J. அருள் குமார் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.