கோலாலம்பூர், டிசம்பர்-4, பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதலமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை இந்தோனீசியா, ஆச்சேவுக்குப் பயணமான போது, உரிமைக் கட்சியின் தலைவருமான அவரை குடிநுழைவுத் துறை தடுத்து நிறுத்தியது.
வெளிநாடு செல்வதிலிருந்து அவர் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருப்பதாக குடிநுழைவு அதிகாரிகள் காரணம் கூறியதாக, உரிமைக் கட்சியின் இடைக்காலச் செயலாளர் சதீஸ் முனியாண்டி தெரிவித்தார்.
MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவில் குடிநுழைவுத் துறை அவரைத் தடுத்து நிறுத்தியது.
MACC-யைக் கேட்டால், அது புத்ராஜெயாவிலிருந்து வந்த உத்தரவு என பதில் வந்ததாக சதீஸ் கூறினார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மீதான MACC-யின் விசாரணைக்காக அவர் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட, வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மடானி அரசாங்கத்தை விமர்சனம் செய்வதால் ராமசாமியை ஒரு குற்றவாளி போல் நடத்துவதா என சதீஸ் கேள்வியெழுப்பினார்.
பண்டா ஆச்சேவின் அதிகாரத் தரப்பான Wali Nanggoroe Aceh-விடமிருந்து அமைதிக்கான விருதைப் பெற ராமசாமி திட்டமிடப்பட்டிருந்தது.
அவரை விருந்தினராக வரவேற்க ஆச்சே தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கடைசி நேரத்தில் அது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சதீஷ் அறிக்கையொன்றில் கூறினார்.