கோலாலம்பூர், அக்டோபர்-13,
ELITE நெடுஞ்சாலையில் இன்னொரு வாகனத்துடன் மோதுவதைத் தவிர்க்க முயன்ற செம்பனை எண்ணெய் டாங்கி லாரி, ஒரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று மதியம் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அந்த லாரி தடம்புரண்டு சாலைத் தடுப்பை மோதி, எதிர்புற சாலையில் போய் நின்றது.
தீப்பற்றிக் கொண்ட நிலையில் லாரி எதிர்புற சாலையில் புகுந்து சாலையோர தடுப்பை மோதிச் செல்லும் வீடியோ முன்னதாக வைரலும் ஆனது.
ஒருவழியாக அவசரப் பாதையில் போய் நின்ற லாரியை மோதுவதிலிருந்து இரு வாகனங்கள் தப்பின.
எனினும் அவ்விபத்தால் சாலையின் நடுவே சிதறிக் கிடந்த வாகனங்களின் பாகங்களை 2 கார்கள் மோதியதில், 21 வயது காரோட்டி காயமடைந்தார்.
மலாக்கா, ஜாசினிலிருந்து சிலாங்கூர் கிள்ளானுக்கு 53 வயது உள்ளூர் ஆடவர் ஓட்டி வந்த போது கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, முதலில் வலப்புறக் காருடன் மோதி ஒரு சுற்று சுற்றி சாலையின் நடுவே குறுக்கே நின்றது விசாரணையில் கண்டறியப்பட்டது.
லாரி ஓட்டுநர் அதில் காயங்களின்றி உயிர் தப்பினார்.