
கோலாலம்பூர், மார்ச்-13 – தைப்பூசக் காவடியாட்டத்தை இழிவுப்படுத்திய வீடியோ சர்ச்சையில் ஏரா எஃ.எம் வானொலிக்கு 250,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது, இஸ்லாத்தை ‘ஒடுக்கும்’ செயல் எனக் கூறப்படுவதை, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் சாடியுள்ளார்.
இதே போல் இஸ்லாம் அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் குறைவான அபராதமே விதிக்கப்பட்டது; ஆக இதில் அரசாங்கம் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், அதன் வழி இஸ்லாத்தை ‘ஒடுக்குவதாகவும்’ சிலர் கூறி வருகின்றனர்.
அதனைத் திட்டவட்டமாக மறுத்த ஃபாஹ்மி, அக்குற்றச்சாட்டு, தீய நோக்கத்துடன் உண்மையை திசை திருப்பும் முயற்சி என்றார்.
ஏரா வானொலிக்கான அபராதம் மற்றும் இஸ்லாத்தை அவமதித்த நகைச்சுவையாளர் ஹரித் இஸ்கண்டார், செசிலிய யாப் இருவருக்கும் விதிக்கப்பட்ட அபராதங்களுக்கான வேறுபாட்டை, முன்னதாத மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC தெளிவாக விளக்கியிருந்தது.
ஏரா மீதான கடுமையான அபராதத் தொகை, பிப்ரவரி 11-ஆம் தேதி அமுலுக்கு வந்த1998-ஆம் ஆண்டு தொடர்பு-பல்லூடகச் சட்டத் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால் ஹரித் இஸ்கண்டார், செசிலியா இருவருக்கும் தலா 10,000 ரிங்கிட் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டதானது சட்டத் திருத்தம் அமுலுக்கு வருவதற்கு முன்பு என MCMC சுட்டிக் காட்டியது.
இன்னொன்று, ஏரா வானொலியின் சர்ச்சைக்குரிய வீடியோ தேசிய நலனை உட்படுத்தி, இன-மன பதற்றத்தை உருவாக்கி விட்டது; அதோடு, தனிநபராகப் பார்க்காமல், நல்ல வருமானம் ஈட்டும் நிறுவனம் என்பதன் அடிப்படையிலேலே அந்த 250,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக அது விளக்கியது.
திருத்தப்பட்ட சட்டத்தின்படி, அக்குற்றத்திற்கு அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.