
கோலாலம்பூர், ஜனவரி-2 – 2025 இணையப் பாதுகாப்பு சட்டம் அல்லது ONSA நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இப்புதியச் சட்டம் தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களையும், இணையக் குற்றங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய முக்கியமான ஆயுதம் என, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தின் கீழ் சமூக ஊடக நிறுவனங்கள் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், மோசடி, அடையாள திருட்டு, தீவிரவாத பிரச்சாரம் உள்ளிட்ட 9 வகை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை நீக்க வேண்டும்…
அதோடு ஆண்டுதோறும் பாதுகாப்புத் திட்டங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தவறினால் 10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.
ONSA சட்ட அமுலாக்கத்தில், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, அமைச்சுகள், சமூக ஊடக சேவைத் தள நிறுவனங்களுடன் போலீஸ் அணுக்கமாக இணைந்து செயல்பட உள்ளதாகவும் IGP சொன்னார்.
2023 முதல் 2025 வரை, இணைய மோசடியில் மட்டும் மலேசியர்கள் 2.77 பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர்.
அதே காலக்கட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் சம்பவங்கள் 688-டாக பதிவாகியுள்ளன.
இந்நிலையில், ONSA பொறுப்புணர்வை வலுப்படுத்தி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதோடு நிதி இழப்புகளையும் குறைக்குமென்றும் காலிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.



