
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – மக்கள் வருமானம் இன்னும் குறைந்த நிலையில் உள்ளதால், அவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாமல் இருக்க பொருள் மற்றும் சேவை வரியான GST-யை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
நிதி அமைச்சு அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளது.
அதற்குப் பதிலாக, விரைவான நிதி விளைவுகளை தருவதோடு, மேலும் இலக்கிடப்பட்டதுமான SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியை அரசாங்கம் தொடர உள்ளது.
SST வரியின் கீழ், மக்கள் பரவலாகப் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெரும்பாலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
SST, மலேசிய தொழில்துறை வகைப்பாட்டின் கீழ் 70% சேவைகளை உள்ளடக்குகிறது; ஆனால் GST காலத்தில் அது 76% ஆக இருந்தது.
இது தவிர, SST-யில் 1,826 பொருட்களுக்கு வரிவிலக்கு உண்டு; ஆனால் 2018-ல் அகற்றப்படும் வரை, GST-யில் வெறும் 607 பொருட்களுக்கு மட்டுமே விலக்கு இருந்தது.
GST-யை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றால், அதற்குத் தயாராக நிறுவனங்களுக்கு 2 வருடங்களாவது தேவை என அமைச்சு விளக்கியது.
நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்தும் அதே வேளை, மக்கள் நலனைக் காக்கும் அரசாங்கத்தின் கடப்பாட்டையும் அமைச்சு மறுஉறுதிப்படுத்தியது.