
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14 – மலேசிய இந்தியர்களுக்கு சிறப்பு அமைச்சரவை செயற்குழு தேவையென, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் வலியுறுத்தியுள்ளார்.
அச்சமூகத்திற்கான திட்டங்களின் அமுலாக்கங்களைப் பிரதமரே நேரடியாகக் கண்காணிக்க இது வாய்ப்பாக அமையும்.
இதன் மூலம் அமைச்சுக்கள், அரசுத் துறைகள், மித்ரா உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களின் கீழ் திட்டங்கள் ஆக்கப்பூர்வமாகவும் விரிவாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்ய முடியும்.
இதனால் இலக்கு வைக்கப்பட்டோருக்கு உதவிகள் சென்றடையும் என்றார் அவர்.
அதே சமயம் blueprint எனப்படும் ‘மலேசிய இந்தியர் பெருந்திட்ட அமுலாக்கத்திற்கும் மடானி அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
சமூகப் பொருளாதார சமநிலை, வேலை வாய்ப்புகள், B40 மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, திறன் பயிற்சிகள், கல்வி உபகாரச்சம்பளம், பள்ளிக் கல்வியை பாதியிலேயே கைவிடுவதைத் தடுப்பது என முறையான – விரிவான ஒரு திட்டமாக இது அமைய வேண்டும்.
தோட்டப் பாட்டாளிகளுக்கு நிரந்த வீடுகள் வேண்டுமென்பதையும் கேசவன் வலியுறுத்தினார்.
நடப்பிலுள்ள சட்டம் 446 தற்காலிக குடியிருப்புக்கே உத்தரவாதம் வழங்குவதால், தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வீட்டுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றார் அவர்.
மக்களவையில் 13-ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போது கேசவன் மேற்கண்டவற்றைப் பரிந்துரைத்தார்.