
கோலாலம்பூர், டிச 18 – மூன்று வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தாய்லாந்தின் ஹட்யாய் நகரின் நிலைமை காரணமாக, மலேசியர்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ளத்திற்குப் பிந்தைய தூய்மைப்படுத்தும் பணிகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் , ஹட்யாய் நகரில் பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் 1.3 பில்லியன் ரிங்கிட்டை எட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சோங்க்லாவில் உள்ள மலேசிய தூதரக உதவியாளர் அகமட் பாமி அகமட் ஷர்காவி ( Ahmad Fahmi Ahmad Sarkawi) தெரிவித்தார்.
துப்புரவுப் பணிகளுக்காக பல லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நகரத்தைச் சுற்றி இன்னும் உள்ளன. அதே நேரத்தில் பெரும்பாலான உணவு விற்பனை மையங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் இன்னும் செயல்படவில்லையென அவர் கூறினார்.
அதோடு வெள்ளத்திற்குப் பிந்தைய நோய்கள் பரவுவது HatYai யில் உள்ள மருத்துவ மையங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதோடு , அவை தற்போது முழு திறனுடன் இயங்குகின்றன.
இந்த நிலையில் புதிய நோயாளிகளை ஏற்றுக்கொள்ளும் திறன் மருத்துவ மையங்களுக்கு குறைவாகவே இருப்பதையும் அகமட் பாமி சுட்டிக்காட்டினார்.
டிசம்பர் 20 ஆம் தேதிவரை கடுமையான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



