
புது டெல்லி, மார்ச்-13-வளைகுடா வட்டாரத்தில் முக்கிய முன்னேற்றமாக இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு Hormuz நீரிணையில் பாதுகாப்பான அனுமதி கிடைத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சியுடன் (Abbas Araghchi) நேரடி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இந்திய கப்பல்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் தடையின்றி தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.
இவ்வேளையில், ஈரான்–அமெரிக்க மோதல் தீவிரமான பிறகு, Hormuz வழியாக இந்தியாவுக்கு வந்த முதல் கச்சா எண்ணெய் கப்பல் மும்பையில் பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
சவூதி கச்சா எண்ணெயை ஏற்றியிருந்த அக்கப்பல், இந்திய கேப்டன் தலைமையில் பயணித்தது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனுடன் (Masoud Pezeshkian)
தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளார்.
அதன் போது, தற்போது நடப்பவைப் பற்றியும் வட்டார பதற்றம், பொது மக்கள் உயிரிழப்பு, அடிப்படை வசதிகள் சேதம் குறித்தும் அவர் ஆழ்ந்த கவலைத் தெரிவித்தார்.
இந்தியர்களின் பாதுகாப்பும், பொருட்கள் மற்றும் எரிசக்தி தடையின்றி செல்லும் வசதியும் இந்தியாவின் முக்கிய முன்னுரிமை என்றும் தாம் வலியுறுத்தியதாக, X தளத்தில் மோடி தெரிவித்தார்.
தவிர, அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான இந்தியாவின் கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, கலந்துரையாடல் மற்றும் தூதரக முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.



