Latestமலேசியா

KESUMA-வின் கீழ் 9 வியூக இலக்குகளை வெளியிட்டார் அமைச்சர் ரமணன்; பணியாளர்களை வலுப்படுத்துவதே நோக்கம்

புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வேலைவாய்ப்பு துறையை வலுப்படுத்த 9 முக்கிய இலக்குகளை அறிவித்துள்ளது.

இதில், gig தொழிலாளர்களுக்கான gig ஆலோசக மன்றம் மற்றும் gig நடுவர் மன்றத்தை அமைப்பது முக்கியமாகுமென, அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

இது, gig தொழிலாளர்களின் பிரச்னைகளை விரைவாகவும் நியாயமாகவும் தீர்க்க உதவும் என, மனிதவள அமைச்சரான பிறகு இன்று தாம் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பில் ரமணன் சொன்னார்.

மற்ற இலக்குகளில், தொழிலாளர் சட்டங்களில் தொடர்ச்சியான மாற்றங்கள், 2026-2035 தேசிய மனிதவளக் கொள்கை, கட்டாயத் தொழிலுக்கு எதிரான தேசிய செயல் திட்டம் 2.0 ஆகியவை அடங்கும்.

தவிர, சமூக பாதுகாப்பை விரிவுபடுத்தும் முயற்சியில், PERKESO சமூக பாதுகாப்பு, gig மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கும் வழங்கப்படும் என்றார் அவர்.

அதேபோல், KESUMA அகாடமி உருவாக்கம், பல கட்ட லெவி முறை, மற்றும் கிராமப்புறங்களில் நடமாடும் தொழிலாளர் நீதிமன்றம் அறிமுகம் ஆகியவையும் அமைச்சின் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த நடவடிக்கைகள், நாட்டின் வேலைவாய்ப்புச் சூழலை மேம்படுத்தும் முக்கிய முயற்சிகளாக அமையுமென ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்னதாக மனிதவள அமைச்சராக ரமணன் இன்று தனது பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்.

காலை 9.07 மணிக்கு மனிதவள அமைச்சின் கட்டடத்திற்கு வந்த அவர், பின்னர் பணிகளைத் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் தனது நேர அட்டையை scan செய்தார்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக இருந்த அந்த சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர், மடானி அமைச்சரவை மாற்றத்தில் முழு அமைச்சராகியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!