
கோலாலம்பூர், நவ 20 – மேடான் Tuanku/Jalan Sultan Ismail நிலையம் மற்றும் Chow Kit இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை கோலாலம்பூர் Monorel நின்றதை அடுத்து ஒரு பயணி மயக்கமடைந்ததோடு , 373 பயணிகள் சிக்கித் தவித்தனர்.
Titiwangsa தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு காலை
9.39 மணிக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து உடனடியாக அந்த இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படை உறுப்பினர்கள் மயக்கமடைந்த பயணியை கண்டுபிடித்து, சுகாதார அமைச்சின் ஊழியர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்பு தொடக்கக் கட்ட சிகிச்சை அளித்தனர்.
பயணிகள் படிப்படியாக மாற்று ரயிலில் ஏற்றிச் செல்லப்பட்டு, காலை 11.03 மணிக்கு மீட்புப் பணி முழுமையாக முடிவடையும் வரை ஜாலான் சுல்தான் இஸ்மாயில் நிலையம் அருகே இறக்கிவிடப்பட்டதாக தீயணைப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரயிலில் இருந்த போக்குவரத்துக் குழு பயணிகளைப் பாதுகாப்பாக மாற்ற நடவடிக்கை எடுத்தததோடு , பொறியியலாளர்கள் ஆய்வுகள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொண்டதாக Rapid Rail வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பயணம் முற்றிலுமாக நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தித்திவங்சா மற்றும் புக்கிட் நானாஸ் இடையே பேருந்துகளை வழங்கியதோடு , KL Sentral–Hang Tuah மற்றும் Hang Tuah–Bukit Nanas இடையே இடைநிலை ரயில் பாதையை Rapid Rail செயல்படுத்தியது.



