
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் -29,
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் அல்லது தவறான நிர்வாகம் இருப்பது கண்டறியப்பட்டால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) விசாரணை நடத்த தயாராக இருப்பதாக அதன் தலைவர் தான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
ஆயினும், இதுவரை எந்தவொரு தரப்பிலிருந்தும் திட்டம் தொடர்பான புகார்கள் எதுவும் பெறப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் அனைத்து குற்றங்களையும் SPRM மீது சுமத்த வேண்டாம் என்றும் சில பிரச்சனைகள் நிர்வாகக் குறைபாடுகளாக இருக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
நேற்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் அந்தோனி லோக், மலேசிய விமான நிலைய ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) மீது நிலப்பரப்புப் பொதுப் போக்குவரத்து முகமை (APAD) விசாரணை தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் இயக்கம் தொடங்கிய ஏரோட்ரெயின் சேவை சமீபத்தில் பல முறை கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது.



