கோலாலம்பூர், டிச 26 – கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலைய பகுதியில் நாட்டிற்குள் நுழைவதைத் தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே சுற்றித் திரியும் வெளிநாட்டினரை குடிநுழைவுத்துறை கண்டறிந்துள்ளது.
அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு கொண்டுச் செல்லும் முகவர் என நம்பப்படுபவர்களுக்காக காத்திருக்கும் பொருட்டு வெளிநாட்டினர் விமானம் புறப்படும் முனையத்தில் காத்திருப்பதை காணமுடிவதாக குடிநுழைவுத்துறையின் Tik Tik க்கில் காணமுடிகிறது.
சிலர் அந்த பகுதியில் பல நாட்களாக காத்திருக்கின்றனர். குறிப்பிட்ட சில இடங்களுக்கு தாங்கள் செல்லமுடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் செயல்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.
விமானத்திலிருந்து தரையிறங்கியவுடன் அவர்கள் குடிநுழைவுத்துறையின் பரிசோதனை முகப்பிடங்களுக்கு செல்லவேண்டும் என KLIA முதலாவது முனையத்தின் செயல் நடவடிக்கை கட்டுப்பாட்டின் துணைத்தலைவர் சுரேஸ் நடராஜா தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் ஸ்டார்பக்ஸில் (Starbuck ) ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி ஒன்றாக அமர்ந்து கொள்கின்றனர்.
நாங்கள் மேற்கொண்ட பரிசோதனைக்குப் பின் சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்தோம். சிலர் பரிசோதனையை தவிர்ப்பதற்காக இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது என்றும் அவர் கூறினார்.
அவர்களின் விமானம் மற்றும் விசா தகவல்களை ஒவ்வொன்றாக சரிபார்ப்போம். அந்த நடவடிக்கை முடிந்தபின் NTL எனப்படும் நுழைவு மறுப்பு அறிவிப்பை வெளியிட கண்காணிப்பு பிரிவு பரிந்துரைக்கும், மேலும் அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என நடராஜா தெரிவித்தார்.
இதனிடையே பயணிகள் வருகைப் பகுதியைச் சுற்றி 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து சந்தேகப்படும்படியாகத் தோன்றிய வெளிநாட்டவர்களைக் கவனமாக பரிசோதிக்கப்படுவார்கள் என குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ஷாக்கரியா ஷாபான் ( Zakaria Shaaban ) கூறினார்.