Latestமலேசியா

KLIA-வில் ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வழித்தடம்; போக்குவரத்து அமைச்சு மீண்டும் அனுமதி

செப்பாங், டிசம்பர் 24-மலேசிய ஐயப்ப பக்தர்களின் சபரிமலை யாத்திரையை எளிதாக்கும் வகையில், KLIA விமான நிலையத்தில் சிறப்பு வழித்தடம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டை போக்குவரத்து அமைச்சும், மலேசிய விமான நிலைய நிர்வாகமும் இணைந்து செயல்படுத்தியுள்ளன.

இவ்வசதி, அடுத்த 3 வாரங்களுக்கு 50,000-க்கும் மேற்பட்ட மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு பயனைத் தருமென, மலேசிய ஐயப்ப சுவாமி சேவை சங்கத் தலைவர் யுவராஜ் குருசாமி கூறினார்.

குறிப்பாக, மூத்தோருக்கும் விமான நிலையத்தில் கூடுதல் உதவிகள் தேவைப்படுவோருக்கும் இது பெரும் வசதியாக இருக்கும் என்றார் அவர்.

ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்கும் விரத கட்டுப்பாடுகள் காரணமாக, அவர்கள் செருப்பு அணியாமல், தனித்துவமான ஆன்மீக நடைமுறைகளுடன் பயணம் செய்கிறார்கள்.

இதனால், சாதாரண பயணிகளுடன் கலந்துச் செல்லும் போது சிரமங்கள் ஏற்படக்கூடும்.

இதை கருத்தில் கொண்டு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் உதவியுடன் போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கடந்தாண்டு இவ்வாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்போது மீண்டும் அவ்வசதியை செய்துகொடுத்துள்ள அமைச்சுக்கும், உதவிய குணராஜுக்கும் யுவராஜ் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வேளையில், எளிதில் எரியக்கூடியவை அல்லது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், நெய், தேங்காய் போன்ற பொருட்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

எனவே, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வான் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கவும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!