
புத்ராஜெயா, டிசம்பர் 26- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA டெர்மினல் 1-ல் சுமார் ஒரு வருடம் தங்கியிருந்ததாக கூறப்படும் உள்ளூர் பெண்மணியின் குடும்பத்தினரை இதுவரை கண்டறிய முடியவில்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அந்த பெண்மணி டிசம்பர் 18 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு தற்போது காஜாங்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை சீரானதும், அவரை பொருத்தமான பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக KLIA மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Azman Shari’at கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அப்பெண்மணி நீண்டகாலம் KLIA-வில் தங்கியிருந்த காரணத்தை கண்டறிய போலீசார் மேல் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன் சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், அந்த பெண்மணி KLIA டெர்மினல் பகுதியில் தனிப்பட்ட பொருட்களுடன் வாழ்ந்து வந்ததாகவும், இலவச இணையம், குளிரூட்டல் வசதி மற்றும் விமான நிலைய நீர் வசதி போன்றவற்றை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.



