
கோலாலம்பூர், ஜூலை-5 – செப்பாங் KLIA விமான நிலையத்தில் செயல்படத் தொடங்கியதுமே இரு முறை தடங்கல்களைச் சந்தித்த போதும், புதிய Aerotrain சேவை, நிர்ணயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாடுகளைப் பூர்த்திச் செய்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
நேற்று காலை Aerotrain சுரங்கப்பாதையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடக் காரணமான வடிகால் பம்ப், புதிய இரயில் அமைப்பு உள்கட்டமைப்பின் ஒரு பகுதி அல்ல, மாறாக பழைய விமான நிலைய வசதியென அவர் தெளிவுப்படுத்தினார்.
இச்சம்பவம் Aerotrain அமைப்பில் உள்ள எந்தவொரு பலவீனத்தாலும் ஏற்படவில்லை; அதே சமயம் சிலர் நினைத்தது போல் இரயில் ‘கனமழையைத் தாங்க முடியவில்லை’ என்பதாலும் ஏற்படவில்லை என அறிக்கை வாயிலாக அமைச்சர் சொன்னார்.
பம்ப் வடிவமைக்கப்பட்டபடி செயல்படத் தவறியபோது, மழைநீர் சுரங்கப்பாதையில் தேங்கி பாதுகாப்பு வரம்பை அடைந்தது; எனவே முன்னெச்சரிக்கையாக Aerotrain பாதுகாப்பு அமைப்பு அதுவாகவே தனது செயல்பாடுகளை நிறுத்தி வைத்தது என்றார் அவர்.
புதன்கிழமை நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், ஒரு பயணி கதவுகள் மூடுவதைத் தடுத்ததால், Aerotrain அமைப்பு நின்றுவிட்டது.
கதவுகள் வலுக்கட்டாயமாக மூடப்படுவதையும், பயணிகள் காயமடைவதையும் தடுக்க இது செய்யப்பட்டது.
புதிய அமைப்பில் இது வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என அந்தோணி லோக் விளக்கினார்.
2 சம்பவங்களும் Aerotrain பாதுகாப்பு அமைப்பின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை நிரூபிக்கின்றன.
KLIA-வில் உள்ள புதிய Aerotrain வசதிகள் அனைத்துலகத் தரங்களை பூர்த்தி செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, அவை சிறப்பாக இயங்குகின்றன என அமைச்சர் கூறினார்.
Aerotrain பழுதடைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் முன்னதாக தகவல் பரவி, MAHB நிர்வாகம் நேற்று மாலை அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.