
செப்பாங், டிசம்பர் 23 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA டெர்மினல் 1-ல் அனுமதி இல்லாமல் கார் வாடகை சேவையை வழங்க முயன்ற நபரை சிலாங்கூர் போக்குவரத்து துறையான JPJ கைது செய்துள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கையின் போது, பெரொடுவா பெஸ்ஸா காருடன் அந்த நபர் பிடிபட்டார். ஆரம்ப விசாரணையில், அவர் ஒரு வங்காளதேச குடிமகனை KLIA டெர்மினல் 1-இலிருந்து கிள்ளான் காப்பார் வரை கொண்டு செல்வதற்கு 77 ரிங்கிட் கட்டணத்தைப் பேரம் பேசியது தெரியவந்துள்ளது.
போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட இக்குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் வரை அபராதமும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட கவுன்டர்கள் அல்லது இ-ஹெய்லிங் செயலிகள் வழியாக மட்டுமே போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துமாறு JPJ அறிவுறுத்தியுள்ளது.



