
சைபர்ஜெயா, ஜனவரி-28 – செலுத்தப்படாத முத்திரை வரிக்கு அபராத விலக்குப் பெறுவதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்திய PKPS எனப்படும் சிறப்பு தன்னார்வ அறிவிப்புத் திட்டம், ஜனவரி 1 முதல் வரும் ஜூன் 30 வரை 6 மாதங்களுக்கு நடைபெறுகிறது.
இது, 2023 ஜனவரி 1 முதல் 2025 டிசம்பர் 31 வரை நிறைவேற்றப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் பொருந்தும் என, உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN தெரிவித்துள்ளது.
அபராத விலக்குப் பெற தனி விண்ணப்பம் தேவையில்லை; வழங்கப்பட்ட இந்த 6 மாத சலுகைக் காலத்தில் முத்திரிரை வரி செலுத்தும் போது, தானாகவே விலக்கு வழங்கப்படும்.
ஆனால், மோசடி (fraud) சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு இத்திட்டம் பொருந்தாது என அவ்வாரியம் தெளிவுப்படுத்தியது.
அதே சமயம், PKPS-ல் பதிவுச் செய்யப்பட்ட ஆவணங்கள் மீண்டும் தணிக்கை செய்யப்படமாட்டாது, ஆனால் PKPS-க்கு வெளியே உள்ள பிற ஆவணங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.
எனவே, பொது மக்கள் தங்கள் ஆவணங்களை முன்கூட்டியே பதிவுச் செய்து, கட்டணங்களைச் செலுத்துமாறு LHDN அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மேல் விவரங்களுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் www.hasil.gov.my என்ற அதிகாரப்பூர்வ தளத்தை வலம் வரலாம்.
இம்முயற்சி, மக்களுக்கு வரி கடமைகளை எளிதாக நிறைவேற்ற உதவுவதோடு, நாட்டின் நிதி நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலனையும் வலுப்படுத்தும் என LHDN கூறிற்று.



