
புத்ராஜெயா, மார்ச்-6-மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான MACC அரசாங்கத்தின் அரசியல் ஆயுதமாக மாறிவிட்டதாக, தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் பெர்சே அமைப்பின் குற்றச்சாட்டு நியாயமற்றது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளார்.
அவ்வாறு கருத்துக் கூறுவது பெர்சேவின் உரிமையென்றாலும், அது தேவையற்றது என்றார் அவர்.
ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய MACC, அண்மையக் காலமாக அந்த அடிப்படை நோக்கத்திலிருந்து விலகி அரசாங்கத்தின் அரசியல் ஆயுதமாக செயல்பட்டு வருவதாக பெர்சே நேற்று சாடியிருந்தது.
பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் முன்னாள் உதவியாளர் James Chai, விசாரணைக்காகத் தேடப்படும் நபராக MACC முன்னதாக அறிவித்ததை அடுத்து பெர்சே அக்குற்றச்சாட்டை முன்வைத்தது.
MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி, தனியார் நிறுவனத்தில் 17.7 மில்லியன் பங்குகள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு வெளியானதிலிருந்தே, அவர் பதவி விலக வேண்டுமென்றும், அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி வரும் பெர்சே, இப்புதிய கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
எனினும், அசாம் பாக்கி மீதான சிறப்புக் குழுவின் விசாரணை அறிக்கைக்கு பெர்சே காத்திருக்காமல், தான்தோன்றித் தனமாக இப்படி அறிக்கை வெளியிடுவது முறையல்ல என அன்வார் சொன்னார்.



