
கோலாலம்பூர், ஜூலை-30- தான் உயிர் வாழ மற்ற மீன் இனங்களைக் கொன்றுத் தின்னும் தன்மைக் கொண்ட 2,000 கிலோ கிராம் ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள், செர்டாங் MAEPS ஏரியில் விடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீன்வளத் துறையின் அனுமதியில்லாமல் அவ்வாறு செய்யப்பட்டிருப்பதைக் கடுமையாகக் கருதுவதாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு (Mohamad Sabu) தெரிவித்தார்.
பொறுப்பற்ற இச்செயலானது, நீர்நிலைகளின் இயற்கை அமைப்பைப் பாதித்து, உள்ளூர் மீன் இனங்களையே அழித்து விடும்.
இதனால் நீண்ட கால அடிப்படையில் நாட்டின் மீன்வளம் பெரிதும் பாதிக்கப்படும் என, மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் மாட் சாபு சொன்னார்.
Showtech 2025 திட்டத்தின் ஒரு பகுதியாக மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமான MARDI ஏற்பாடு செய்த மீன்பிடிக்கும் போட்டியின் போது, அந்த மீன்கள் MAEPS ஏரியில் விடப்பட்டதாகத் தெரிகிறது.
இவ்வேளையில் பூர்வீகமற்ற மீன்கள் ஊடுருவதைத் தடுக்க, சுற்றியுள்ள நீர் அமைப்புகளுக்குள் மீன் குஞ்சுகள் நுழைவதைத் தடுக்க ஏரியின் கடைப் பகுதியில் வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள இந்த ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க, அரசாங்கம் பொதுமக்களுக்கு மீன்பிடி நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்கிறது. பொது மக்களுக்கு விழிப்புணர்வும் அதிகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சொன்னார்.