
Microsleep காரணமாக 20% சாலை விபத்துகள் – MIROS எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி 20 –
வாகனம் ஓட்டும் போது சில விநாடிகள் தெரியாமலேயே தூங்கிவிடும் “Microsleep” நிலை, மலேசியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் சுமார் 20 விழுக்காட்டிற்கு காரணமாக இருப்பதாக மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான MIROS தெரிவித்துள்ளது.
MIROS துணை இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் டாக்டர் சித்தி ஸஹாரா இஷாக் (Prof Dr Siti Zaharah Ishak) கூறுகையில், சோர்வு மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்படும் இந்த நிலை 2 முதல் 10 விநாடிகள் வரை ஓட்டுநர் விழிப்புணர்வின்றி இருப்பதை குறிக்கிறது. சில நேரங்களில் கண்கள் திறந்திருந்தாலும், ஓட்டுநர் உணர்வற்ற நிலையில் இருக்கலாம்.
பண்டிகைக் காலங்கள் மற்றும் பள்ளி விடுமுறைகளில் நீண்ட தூரப் பயணங்கள் அதிகரிப்பதால் விபத்து அபாயம் மேலும் உயர்கிறது. இக்காலத்தில் நெடுஞ்சாலைகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
“Microsleep”-இன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கையில் சஞ்சலம், வேக மாற்றம், கவனம் சிதறல் போன்றவை காணப்படுகின்றன. ஓட்டுநர்கள் போதுமான தூக்கம் பெறவும், பயணத்தை முன்கூட்டியே திட்டமிடவும், தூக்கம் வந்தால் உடனே ஓய்வு மையங்களில் நிறுத்தி ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய வாகனங்களில் உள்ள பாதை விலகல் எச்சரிக்கை மற்றும் தானியங்கி அவசர பிரேக் போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சாலை பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்றும் MIROS தெரிவித்துள்ளது.



