Latestமலேசியா

MIED கல்விக் கடனுதவிக்கான நேர்முகத் தேர்வில் 92 மாணவர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர், ஏப்ரல்-28, ம.இ.காவின் கல்விக் கரமான MIED வழங்கும் கல்விக் கடனுதவிகளுக்கான நேர்முகத் தேர்வு இன்று கோலாலம்பூர், ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது.

கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை zoom வழியாக பதிந்துகொண்ட 181 மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 92 மாணவர்களுக்கு, MIED வாரிய உறுப்பினர்கள் அந்த நேர்முகத் தேர்வை நடத்தினர்.அவர்களோடு 50 பெற்றோர்களும் வந்திருந்தனர்.

இம்மாணவர்கள் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகம், கல்லூரிகளைச் சேர்ந்த்க மருத்துவம், சட்டத்துறை, பல் மருத்துவம், ஏவியேஷியன் என 10க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களாவர்.

நேர்முகத் தேர்வை MIED-யின் 4 அறங்காவலர்களான டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணி, டத்தோ Dr நெல்சன் ரெங்கநாதன், டத்தின் படுக்கா கோமளாதேவி மற்றும் உஷாநந்தினி ஆகியோர் நடத்தினர்.

MIED கல்விக் கடனுதவி வழி மாணவர்கள் அவர்களின் மேற்படிப்பு நெடுகிலும் அதிகபட்சம் தலா 50,000 ரிங்கிட்டை பெற முடியும்.

கல்வித் தேர்ச்சி, பெற்றோரின் நிதி நிலைமை, தேர்ந்தெடுத்த துறை, மேற்படிப்புக் காலம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கடனுதவி அங்கீகரிக்கப்படும்.

இந்தக் கடனுதவித் திட்டத்திற்காக மொத்தம் 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாக, ம.இ.கா தேசிய உதவித் தலைவருமான டத்தோ Dr நெல்சன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

MIED-யின் கல்விக் கடனுதவி மாணவர்களின் மேற்படிப்புக்கு மிகவும் உறுதுணையாக இருக்குமென அறங்காவலரான உஷா நந்தினி கூறினார்.

கல்வியில் முதலீடு செய்வதே வறுமையை ஒழிப்பதற்கும் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் மிகவும் ஆக்ககரமான வழியென்பது, ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் தாரக மந்திரமாகும்.

அதற்கு ஏற்பவே இந்தக் கடனுதவித் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான நிதியை வழங்கியதன் மூலம், கல்விக் கடனுதவி மற்றும் உபகாரச் சம்பளங்களை வழங்கும் அரசு சாரா நிறுவனங்களில், MIED ஒரு முக்கிய பங்களிப்பாளராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!