
கோத்தா கெமுனிங் – பெரிக்காத்தான் நேஷனல் எதிர்கட்சி கூட்டணியில் MIPP மற்றும் உரிமைக் கட்சிகள் வெறும் காட்சிக்கு வைக்கப்பட்ட அரசியல் தளவாடங்களே… அவற்றால் வேறு எந்த பயனும் இல்லையென, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் கடுமையாக சாடியுள்ளார்.
தேர்தல் காலங்களில் பல்லினக் கூட்டணியாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு மட்டுமே அவையிரண்டும் பெரிக்காத்தானுக்கு பயன்படுகின்றன.
தேர்தல் முடிந்ததும் மீண்டும் கண்காட்சி அறைக்கு அவைத் திரும்பி விடும்.
நடப்பவற்றைப் பார்த்தால் அப்படி தான் சொல்லத் தோணுகிறது என்றார் அவர்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநராக டத்தோ எம். குமார் நியமிக்கப்பட்டதை, பெர்சாத்து கட்சியின் தலைவர் ஒருவர் இனவாதமாக பேசுகிறார்; அதனை ‘மலேசியர்களுக்கான மலேசியா’ என்ற சிந்தாத்தத்துடன் தொடர்புப் படுத்துகிறார்.
டத்தோ குமாரின் சேவைக்கும் அர்ப்பணிக்கும் தகுதி அடிப்படையில் கிடைத்த அங்கீகாரத்தை கொச்சைப்படுத்துகிறார்.
ஆனால், அக்கூட்டணியில் உள்ள MIPP, உரிமை போன்ற இந்தியர் சார்ந்த கட்சிகள் அதனைக் கண்டித்து ஒரு வார்த்தைப் பேசவில்லை
இந்த நிமிடம் வரை அவை மௌனம் காப்பதிலிருந்தே, எந்த அளவுக்கு அவை சமுதாயத்திற்கு குரல் கொடுக்கின்றன என்ற லட்சணம் வெளிப்படுகிறது.
அவர்களின் அமைதி ராஜ தந்திரம் அல்ல, மாறாக கோழைத்தனமாகும்.
தலைவர்கள் என்பவர்கள் மலேசியர்களை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர பிளவுப்படுத்தி வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்றும் பிரகாஸ் நினைவுறுத்தினார்.
புக்கிட் அமான் CID தலைவர் போன்ற ஒரு முக்கியப் பதவிக்கு ஓர் இந்தியர் நியமிக்கப்பட்டதை விமர்சனம் செய்யும் விதமாக, பெர்சாத்து போர்டிக்சன் தொகுதி தலைவரான Chegubard எனப்படும் Badrul Hisham Shahrin முன்னதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
DAP அரசாங்கத்தில் இருப்பதால் அதன் ‘Malaysian Malaysia’ கொள்கைப்படியே இதெல்லாம் நடக்கின்ற என்ற ரீதியில் அவர் பேசியிருந்தார்.