
கோலாலம்பூர், அக்டோபர்-7,
16-ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் 12 நாடாளுமன்ற மற்றும் 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட, MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி விரும்புகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கொள்கையுரையாற்றிய போது, அதன் தலைவர் பி.புனிதன் அக்கோரிக்கையை முன்வைத்தார்.
மாநாட்டை திறந்து வைத்து உரையாற்றிய பெரிக்காத்தான் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், புனிதனின் கோரிக்கைக்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தார்.
எனினும், தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதாகவும், மற்றக் கூட்டணி கட்சிகளுடன் பேசிய பிறகே எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்றும் முஹிடின் சொன்னார்.
இவ்வேளையில், இளைஞராக இருந்துகொண்டு கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தும் புனிதனின் தலைமைத்துவம் குறித்தும் முஹிடின் தமதுரையில் பேசியது பேராளர்களின் கவனத்தைப் பெற்றது.
கட்சி நலன் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கும் குரல் கொடுக்கும் புனிதனை, ‘என் தளபதி’ என முஹிடின் தமிழில் வருணிக்க, அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.
முஹிடினின் அப்பாராட்டு வைரலானதோடு, சமூக வலைத்தளங்களிலும் புனிதனின் புகைப்படங்களை பகிர்ந்து ‘My Thalapathy’ என்ற hashtag-களை அக்கட்சியினர் trending செய்து வருகின்றனர்.
16-ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால், முஹிடினே 11-ஆவது பிரிதமர் என MIPP தீர்மானம் நிறைவேற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.வ்