
பிறை, பிப்ரவரி-22 – MISI எனப்படும் மலேசிய இந்தியர் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் அண்மையில் ட்ரோன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
பிப்ரவரி 16 முதல் 20 வரை பினாங்கு, பிறையில் உள்ள பிறை தொழில்துறை பயிற்சி மையத்தில் அப்பட்டறை நடத்தப்பட்டது.
வேகமாக வளர்ந்து வரும் ட்ரோன் துறையில் இந்திய இளைஞர்களும் அதிகளவில் ஈடுபட்டு வருமானமீட்ட வாய்ப்பேற்படுத்தித் தருவதே அதன் நோக்கமாகும்.
இதில் ஏராளமானோர் குறிப்பாக இளையோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
5 நாட்களுக்கு 40 மணி நேரங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி, ஆஸ்திரேலியாவின் ட்ரோன் தொழில்நுட்பக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
இப்பயிற்சியில், பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தலோடு நிற்காமல், ட்ரோன்களை இயக்கத் தேவையான பயன்மிக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
பயிற்சியில் பங்கேற்றவர்கள், தங்களுக்குப் பயனுள்ள தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகக் கூறினர்.
ட்ரோன் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்குண்டான அம்சங்களைத் தாங்கள் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் மனித வள மேம்பாட்டுக் கழகமான HRD Corp-பின் இந்த MISI திறன் பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
AI அதி நவீனத் தொழில்நுட்பம், விவேகமான விவசாயம், ட்ரோன் உள்ளிட்ட தேவை அதிகரித்து வரும் பல்வேறு தொழில்துறைகளில் MISI வழங்கும் பயிற்சித் திட்டங்களுக்கு 6,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பதிந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.